சென்னை கடற்கரை ரயில் நிலைய நடைமேடையில் உள்ள கடையில் இன்று திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் பெரும் பரபரப்பு நிலவியது.

சென்னையின் மிக முக்கியமான ரயில் நிலையங்களில் ஒன்றான கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து, நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் புறநகர் ரயில்கள் மூலம் பல்வேறு இடங்களுக்குப் பயணம் செய்கின்றனர். இன்று வழக்கம் போல பயணிகள் ரயிலுக்காக நடைமேடையில் காத்திருந்தனர்.

அப்போது, ரயில் நிலையத்தின் 3-வது மற்றும் 4-வது நடைமேடையில் அமைந்துள்ள ஒரு கடையில் திடீரென தீப்பிடித்தது. மளமளவெனப் பரவிய தீயால் அந்தப் பகுதி முழுவதும் புகை மூட்டமாகக் காணப்பட்டது. இதைக் கண்ட பயணிகள் அதிர்ச்சியடைந்து பாதுகாப்பான இடங்களுக்கு ஓடினர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், பற்றி எரிந்த தீயை விரைவாகப் போராடி அணைத்தனர். நல்வாய்ப்பாக இந்த விபத்தில் பயணிகள் யாருக்கும் எவ்வித காயமோ அல்லது பாதிப்போ ஏற்படவில்லை.

இந்தத் தீ விபத்து மின் கசிவு காரணமாக ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து ரயில்வே போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்து காரணமாக ரயில் நிலையத்தில் சிறிது நேரம் ரயில் போக்குவரத்து மற்றும் பயணிகள் நடமாட்டத்திடையே பரபரப்பு ஏற்பட்டது.