ஈரானின் தலைநகர் தெஹ்ரான் அருகே உள்ள கராஜ் பகுதியில், கடந்த வாரம் அரசுக்கு எதிராக நடைபெற்ற பிரம்மாண்ட போராட்டத்தில் 26 வயதான எர்பான் சொல்தானி என்பவர் கலந்து கொண்டார்.

இந்தப் போராட்டத்தின் போது ஈரானிய பாதுகாப்புப் படையினரால் அவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், எவ்வித முறையான விசாரணையும் இன்றி எர்பானுக்கு இன்று (ஜனவரி 14) மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக நார்வேயைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஈரான் மனித உரிமைகள் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், எர்பானுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட விபரம் அவரது குடும்பத்தினருக்குத் தெரிவிக்கப்பட்டு விட்டதாகவும், தண்டனை இன்று நிறைவேற்றப்படும் என்றும் உறுதிப்படுத்தியுள்ளது. “கடவுளுக்கு எதிராகப் போர் தொடுத்தது” என்பதே அவர் மீதான முதன்மைக் குற்றச்சாட்டாகும். மேலும், நீதிமன்றத்தில் அவருக்காக வாதிட வழக்கறிஞரை வைத்துக்கொள்ளவும் அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

ஈரானில் தற்போது 31 மாகாணங்களில் உள்ள 100 நகரங்களில் அரசுக்கு எதிரான மக்கள் போராட்டம் 17-வது நாளாகத் தொடர்ந்து வருகிறது. இதுவரை இந்தப் போராட்டங்களில் 9 சிறுவர்கள் உட்பட 648 பேர் உயிரிழந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், இணையதளச் சேவை முடக்கப்பட்டுள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை 6 ஆயிரத்தைத் தாண்டியிருக்கக் கூடும் என்றும், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் மனித உரிமை அமைப்புகள் கவலை தெரிவித்துள்ளன. எர்பானின் மரண தண்டனையைத் தடுத்து நிறுத்த சர்வதேச சமூகம் முன்வர வேண்டும் என ஈரான் உரிமை குழுக்கள் கோரிக்கை விடுத்துள்ளன.