கரூரில் பரபரப்பான அரசியல் மற்றும் சட்டச் சூழல்களுக்கு இடையே, காத்திருப்புப் பட்டியலில் இருந்த ஆய்வாளர் மணிவண்ணன் மீண்டும் அதே மாவட்டத்தில் நியமிக்கப்பட்டுள்ளார்.
கரூர் நகர காவல் ஆய்வாளராகப் பணியாற்றி வந்த மணிவண்ணன், கடந்த 10 நாட்களுக்கு முன்பு காத்திருப்புப் பட்டியலுக்கு மாற்றப்பட்டிருந்த நிலையில், தற்போது அவர் மீண்டும் கரூர் மாவட்ட எஸ்.பி. அலுவலக தனிப்பிரிவு காவல் ஆய்வாளராகத் தற்காலிகமாகப் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக கரூர் நகர காவல் ஆய்வாளராகப் நியமிக்கப்பட்ட மணிகண்டன் என்பவரும் தற்போது இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கரூரில் நிலுவையில் உள்ள வழக்கு தொடர்பாக சிபிஐ விசாரணை நடைபெற்று வரும் சூழலில், ஆய்வாளர் மணிவண்ணன் அதே மாவட்டத்திலேயே தற்காலிகப் பணி நியமனம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, தேர்தல் விதிமுறைகள் மற்றும் நிர்வாகக் காரணங்களை முன்னிட்டு, திருச்சி மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட 47 காவல் ஆய்வாளர்களைப் பணியிட மாற்றம் செய்து திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் (IG) பாலகிருஷ்ணன் இன்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.