சத்தீஷ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் உள்ள உணவகம் ஒன்றில் காம்தா பிரசாத் (25) என்பவர் பணியாற்றி வந்தார். இவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் வழியாக ரோஷ்னி (22) என்ற பெண்ணுடன் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. இந்த அறிமுகம் காதலாக மாறிய நிலையில், இருவரும் பழகி வந்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக இருவருக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பிரசாத், தனது காதலி ரோஷ்னியின் போன் அழைப்புகள் மற்றும் மெசேஜ்களைத் தவிர்த்ததோடு, அவரது செல்போன் எண்ணையும் ‘பிளாக்’ செய்துள்ளார். பிரசாத் வேறு ஒரு பெண்ணைக் காதலிப்பதாக சந்தேகப்பட்ட ரோஷ்னி, மிகுந்த கோபத்துடன் கத்தியை எடுத்துக்கொண்டு பிரசாத் தங்கியிருந்த வீட்டிற்கு சென்றுள்ளார்.

அங்கு சென்ற ரோஷ்னி, பிரசாத்திடம் செல்போனைத் தரும்படி கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் பிரசாத்தின் நெஞ்சில் சரமாரியாகக் குத்தினார். பிரசாத்தின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த சக நண்பர்கள், ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், ரோஷ்னியை கைது செய்தனர். போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், காதலனை மிரட்டுவதற்காகவே கத்தியை எடுத்துச் சென்றதாகவும், ஆத்திரத்தில் குத்திவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.