புதுச்சேரியில் இருந்து கோவை மாவட்டம் பொள்ளாச்சிக்கு நேற்று இரவு 9 மணியளவில் தனியார் ஆம்னி பஸ் ஒன்று புறப்பட்டது. இந்த பஸ்சில் 13 பயணிகள் இருந்தனர். வேல்ராம்பட்டை சேர்ந்த செந்தில்குமார் பஸ்சை ஓட்டிச் சென்றார்.

பஸ் நிலையம் அருகே உள்ள 100 அடி சாலை மேம்பாலத்தில் பஸ் சென்றுகொண்டிருந்தபோது, அதன் முன்பகுதியில் இருந்து திடீரென புகை கிளம்பியது. இதனை கவனித்த ஆட்டோ டிரைவர் ஒருவர், பஸ் டிரைவரை எச்சரித்தார். உடனே டிரைவர் பஸ்சை நிறுத்தினார். அதற்குள் பஸ்சின் உள்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பயணிகள் அலறியடித்தபடி பஸ்சில் இருந்து அவசர அவசரமாக கீழே இறங்கினர். சிலர் உயிர் பயத்தில் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்துக் கொண்டு வெளியே குதித்தனர்.

பயணிகள் அனைவரும் கீழே இறங்கிய சில நிமிடங்களிலேயே பஸ் முழுவதும் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. தீ மளமளவென பரவியதால், 100 அடி மேம்பாலத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இது குறித்துத் தகவல் அறிந்த புதுச்சேரி தீயணைப்பு வீரர்கள் இரண்டு வாகனங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, நீண்ட நேரம் போராடித் தீயை அணைத்தனர். எனினும் பஸ் முழுமையாக எரிந்து உருக்குலைந்ததுடன், பயணிகளின் உடைமைகளும் தீயில் கருகி நாசமானது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சீனியர் போலீஸ் சூப்பிரண்டுகள் கலைவாணன், நித்யா ராதாகிருஷ்ணன் மற்றும் போலீசார் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டனர். அதிர்ஷ்டவசமாகப் பயணிகள் அனைவரும் உயிர் தப்பிய நிலையில், ஓடும் பஸ் தீப்பற்றி எரிந்த சம்பவம் புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.