பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பகுதி நேர ஆசிரியர் கண்ணன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திமுகவின் 181-வது தேர்தல் வாக்குறுதியான ‘பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம்’ என்ற கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி, கடந்த ஜனவரி 6 முதல் ஆசிரியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, நேற்று சென்னையில் நடைபெற்ற போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட ஆசிரியர்கள் வானகரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டனர்.

அரசு தங்கள் கோரிக்கைகளை ஏற்காததைக் கண்டித்தும், காவல்துறையின் அடக்குமுறையை எதிர்த்தும் பெரம்பலூர் மாவட்டம் நெய்குப்பை பள்ளியைச் சேர்ந்த உடற்கல்வி ஆசிரியர் கண்ணன் அங்கேயே விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், இன்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஆசிரியர் கண்ணன் உயிரிழந்த அதே நாளில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் நடத்திய பேச்சுவார்த்தையில், பகுதி நேர ஆசிரியர்களுக்கான ஊதியம் ரூ.12,500-லிருந்து ரூ.15,000 ஆக (ரூ.2,500 உயர்வு) உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும், தங்களின் முக்கிய கோரிக்கையான பணி நிரந்தரம் குறித்து உறுதியான அறிவிப்பு வராத நிலையில், சக ஆசிரியரின் உயிரிழப்பு போராட்டக்காரர்களிடையே மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது.