தஞ்சாவூர் மாவட்டம் கல்லணையில் கரிகாலசோழன் சிலைக்கு மாலை அணிவித்து படையலிட்டு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ள கல்லணை, சோழ மன்னன் கரிகாலனால் சுமார் கி.பி. 150-ல் கட்டப்பட்டது. இது காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட உலகின் பழமையான மற்றும் இன்றும் பயன்பாட்டில் உள்ள நீர்த்தடுப்பணைகளில் ஒன்றாகும், மணல் அடித்தளத்தில் கட்டப்பட்ட இதன் நுட்பமான அமைப்பு, தமிழர் பொறியியல் திறனுக்குச் சான்றாகும்; இதன் மூலம் தஞ்சாவூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களின் விவசாய நிலங்கள் பாசன வசதியைப் பெற்று, வறட்சியிலிருந்து காக்கப்படுகின்றன.

சுமார் 1080 அடி நீளம், 66 அடி அகலம் மற்றும் 18 அடி உயரம் கொண்டது. காவிரி ஆற்றின் நீரைத் திருப்பி கொள்ளிடம் ஆற்றில் விட்டு, டெல்டா பகுதிகளில் பாசனத்திற்காகப் பயன்படுத்தவும், வெள்ளத்திலிருந்து பாதுகாக்கவும் கட்டப்பட்டது இந்த கல்லணை. ஓடும் நீரில், வெறும் மணலில் அடித்தளம் அமைத்து அணை கட்டப்பட்ட தொழில்நுட்பம், உலகப் பொறியாளர்களையே வியப்பில் ஆழ்த்தி வருகிறது.

இது உலகின் நான்காவது பழமையான நீர்-திசைதிருப்பும் அமைப்பு, மற்றும் இந்தியாவில் இன்றும் பயன்பாட்டில் உள்ள மிகப் பழமையான நீர்ப்பாசனத் திட்டம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கல்லணையில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே காவிரியின் குறுக்கே அணையை கட்டி தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா பகுதி பாசனம் பெறுவதற்காகவும், வெள்ள காலங்களில் நீரை பிரித்து கொள்ளிடத்தில் விடுவதற்கும் கரிகாலசோழனால் கட்டப்பட்ட கல்லணையில் கடந்த 6 ஆண்டுகளாக தைமாதம் 2ம்நாள் உழவர் தினத்தன்று காவேரி உரிமை மீட்பு குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் தலைமையில் கரிகாலசோழன் சிலை, ஆர்த்தர்காட்டன் ,காவிரித் தாய், அகத்தியர், பேரரசர் இராசராச சோழன் உருவசிலைக்கு மாலைஅணிவித்து, படையலிட்டு, மலர்தூவி மரியாதை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் 7ம் ஆண்டாக இன்று 16ம் தேதி படையலிடும் நிகழ்வு கல்லணையில் நடைபெற்றது. முன்னதாக கரிகால்சோழன் மணிமண்டப வாயிலில் பொங்கலிட்டு தன்னுரிமைகாப்போம், காவேரியைகாப்போம் என கோஷமிட்டனர். பின்னர் கரிகால் சோழன் சிலை முன்பாக படையலிட்டு மரியாதை செய்தனர்.

பின்னர் காவிரிமீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் பெ.மணியரசன் நிருபர்களிடம் கூறியதாவது: கல்லணையை கட்டிய கரிகாலச்சோழனுக்கு நன்றி செலுத்தும் விதமாக, தைமாதம் 2ம் நாளான உழவர்திருநாளில், இந்த விழாவை அரசு விழாவாக கொண்டாட தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தொடர்ந்து 6 ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறோம். மேலும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட டெல்டா பகுதியில் சிப்காட் தொழில் பேட்டை அமைக்க அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கக் கூடாது.

பிரதமர் மோடி விவசாயிகள் பெருமையை பேசுவதுடன் மட்டும் இல்லாமல் சம்பா, தாளடி நெல் குவிண்டாலுக்கு குறைந்தபட்ச விலையாக ரூ.3500 வழங்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் தமிழ்நாடு உழவர்கள் பாதுகாப்பு சங்க செயலர் சுவாமிமலை சுந்தர விமலநாதன், திருவையாறு சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் எம். ரத்தினசாமி, காவிரி உரிமை மீட்புக்குழு வெள்ளாம்பெரம்பூர் துரை. ரமேஷ், மணிமொழியன், நாச்சியார்பட்டி டி.எஸ்.திருமாறன், சாமி. கரிகாலன், சிதம்பரம் சுரேஷ்குமார், விஜி, தனசேகரன், ஜெயச்சந்திரன், பார்த்திபன் மற்றும் விவசாயிகள் திரளாக கலந்து கொண்டனர்.