மணிப்பூரில் நிலவி வந்த இன மோதல் மற்றும் வன்முறை காரணமாக, கடந்த 2025-ம் ஆண்டு பிப்ரவரி 9-ம் தேதி என். பிரேன் சிங் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அதனைத் தொடர்ந்து அங்கு ஓராண்டாகக் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் இருந்தது. இந்நிலையில், இன்று (பிப். 4) மாலை பாஜக தலைமையில் புதிய அரசு பதவியேற்றது.
தலைநகர் இம்பாலில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில், மணிப்பூர் புதிய முதல்வராக யும்நாம் கெம்சந்த் சிங் அவர்களுக்கு ஆளுநர் அஜய் பல்லா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இவருடன் இரண்டு துணை முதல்வர்களும் பதவியேற்றுக்கொண்டனர்.
மணிப்பூர் அரசியல் வரலாற்றில் முதல்முறையாக குகி இனத்தைச் சேர்ந்த நெம்சா கிப்கென் என்ற பெண் துணை முதல்வராகப் பொறுப்பேற்றுள்ளார். மற்றொரு துணை முதல்வராக, நாகா மக்கள் முன்னணியை சேர்ந்த லோசி டிகோ நியமிக்கப்பட்டுள்ளார்.
நேற்று டெல்லியில் நடைபெற்ற பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் யும்நாம் கெம்சந்த் சிங் சட்டப்பேரவை குழுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து இன்று புதிய அரசு பதவியேற்றுள்ளதால், குடியரசுத் தலைவர் ஆட்சி திரும்பப் பெறப்படுவதாக உள்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மைதேயி – குகி இன மக்களிடையே அமைதியை நிலைநாட்டுவதே புதிய அரசின் முதன்மை சவாலாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.