கரூர் மாவட்டம் லாலாபேட்டை மேம்பாலம் அருகே, கரூர்–திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து நிகழ்ந்தது.
கரூரைச் சேர்ந்த தனியார் டெக்ஸ்டைல் நிறுவனத்தின் பேருந்து, பணியாளர்களை ஏற்றிக்கொண்டு குளித்தலை நோக்கி சென்றுகொண்டிருந்தது. அதே நேரத்தில், குளித்தலை அருகே பரளி கிராமத்தைச் சேர்ந்த விஜய் – சௌந்தர்யா தம்பதியர், அவர்களின் ஒரு வயது பெண் குழந்தை சன்மதியுடன் இருசக்கர வாகனத்தில் கரூர் மாவட்டம் புலியூரில் உள்ள மனைவியின் தாய் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர்.
அப்போது அந்த தனியார் பேருந்து அதிவேகமாகவும், தவறான பாதையில் (ராங் ரூட்) எதிர்திசையில் வந்ததாக கூறப்படுகிறது. இதனால் பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது நேருக்கு நேர் மோதியது. இந்த கோர விபத்தில் தாய், தந்தை மற்றும் ஒரு வயது குழந்தை என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேரும் பேருந்தின் சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜோஷ் தங்கையா மற்றும் லாலாபேட்டை காவல் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, உயிரிழந்தவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த விபத்தின் காரணமாக கரூர்–திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை மற்றும் கைக்குழந்தை உயிரிழந்த இந்த சம்பவம் கரூர் மாவட்டம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக விபத்து ஏற்பட்ட பகுதியில் மின் விளக்குகள் இல்லாததால் இதே போல் அடிக்கடி விபத்து ஏற்படுவதாகவும் இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.