தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டிற்கான முதல் கூட்டம் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9.30 மணிக்குத் தொடங்குகிறது. மரபுப்படி ஆண்டின் முதல் கூட்டத்தில் ஆளுநர் உரையாற்றுவது வழக்கம் என்பதால், நாளை காலை ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமைச் செயலகம் வருகை தந்து உரையாற்ற உள்ளார். இதற்காக காலை 9.10 மணிக்கு ஆளுநர் மாளிகையிலிருந்து புறப்படும் அவருக்கு, தலைமைச் செயலகத்தில் போலீஸ் அணிவகுப்பு மரியாதையுடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. பின்னர் சபாநாயகர் மு.அப்பாவு அவரை வரவேற்று அவைத் தலைவர் இருக்கைக்கு அழைத்துச் செல்வார். சரியாக 9.30 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்துடன் கூட்டத்தொடர் தொடங்கி, ஆளுநரின் உரை நிகழ்த்தப்படும்.

இருப்பினும், கடந்த மூன்று ஆண்டுகளாக ஆளுநர் ஆர்.என்.ரவி தனது உரையை முழுமையாக வாசிக்காமல் புறக்கணித்து வருவதால், நாளை அவர் முறையாக உரையாற்றுவாரா என்ற சந்தேகம் அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது. 2023-ம் ஆண்டு உரையில் பெரியார், அம்பேத்கர், கலைஞர் போன்ற வார்த்தைகளை ஆளுநர் வாசிக்காததால் சர்ச்சை ஏற்பட்டு அவர் அவையிலிருந்து வெளியேறினார். அதேபோல், 2024 மற்றும் 2025-ம் ஆண்டுகளில் தேசிய கீதம் பாடப்படுவதை முன்னிலைப்படுத்தி ஆளுநர் தனது உரையை வாசிக்காமல் பாதியிலேயே வெளியேறிய நிகழ்வுகள் அரங்கேறின. தமிழக அரசு தயாரித்துக் கொடுக்கும் உரையில் அரசின் சாதனைகள் மற்றும் கொள்கைகள் இடம்பெற்றிருக்கும் நிலையில், அதனை ஆளுநர் எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறார் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

நாளை ஆளுநர் தனது ஆங்கில உரையை முடித்ததும், அதனைத் தமிழில் சபாநாயகர் வாசிப்பார். அதனைத் தொடர்ந்து அலுவல் ஆய்வுக்குழு கூடி, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் குறித்து எத்தனை நாட்கள் விவாதிப்பது என முடிவு செய்யும். பெரும்பாலும் இந்தத் தொடர் வரும் 23-ம் தேதி வரை நடைபெறும் எனத் தெரிகிறது. பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில், ஆளுநருக்கும் தமிழக அரசுக்கும் இடையே நீடித்து வரும் பனிப்போர் இந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரிலும் எதிரொலிக்குமா என்பது நாளை காலை அவை கூடிய பின்னரே தெரியவரும்.