பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்த கட்சி நிர்வாகிகளுடன் நேர்காணல் நடத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், NDA கூட்டணியின் வலிமையை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு கருத்துகளை தெரிவித்தார். “எங்கள் கூட்டணிக்கு மேலும் சில கட்சிகள் வரவுள்ளன” என்று உறுதியாகக் கூறிய அன்புமணி, திமுகவை நேரடியாக சாடினார்.

கடந்த தேர்தலில் சிதறிக் கிடந்த எதிர்க்கட்சிகள் இம்முறை இணைந்துள்ளதால், திமுக பயத்தில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். பிரதமர் மோடி தலைமையில் நடத்தப்பட்ட பொதுக்கூட்டத்தை நினைவுகூர்ந்த அன்புமணி, “பொதுக்கூட்டமாகத் தான் நடத்தினோம்… ஆனால் மாநாடு போல் அமைந்துவிட்டது. அதன் பிறகு தமிழ்நாட்டில் மிகப்பெரிய மாற்றம் நிகழ்ந்துள்ளது” என்று பெருமிதத்துடன் தெரிவித்தார். NDA கூட்டணியின் பிரசாரம் மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், இது தேர்தல் முடிவுகளில் பிரதிபலிக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

கூட்டணி ஆட்சி குறித்து தேர்தலுக்குப் பின்னரே முடிவு செய்யப்படும் என்றும் அவர் தெளிவுபடுத்தினார். திமுக ஆட்சியை கடுமையாக விமர்சித்த அன்புமணி, “தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பாக வாழ்வதாக முதல்வர் மீண்டும் பொய் பேசுகிறார்” என்று குற்றம்சாட்டினார். “இந்தியாவிலேயே பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தமிழ்நாட்டில் தான் அதிகம் அரங்கேறுகின்றன” என்று தரவுகளை முன்வைத்து பேசிய அவர், திமுக ஆட்சியின் தோல்வியை வெளிப்படுத்தினார். பெண்கள் பாதுகாப்பு உள்ளிட்ட அடிப்படைப் பிரச்னைகளில் அரசு தோற்றுள்ளதாகவும் அவர் சாடினார்.

போதைப்பொருள் குறித்தும் அன்புமணி கடுமையாக விமர்சித்தார். “ரூ.3000 கோடிக்கு போதைப்பொருளை விற்றது இவர்தான்” என்று திமுகவை சுட்டிக்காட்டிய அவர், போதைப்பொருள் புழக்கம் தமிழ்நாட்டை அழித்து வருவதாகக் கூறினார். இதை தடுக்க திமுக தவறிவிட்டதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.கடந்த தேர்தலில் எதிர்க்கட்சிகள் சிதறியதால் திமுக ஜெயித்துவிட்டதாகக் கூறிய அன்புமணி, இம்முறை NDA கூட்டணி ஒன்றிணைந்து வலுவாக உள்ளதால் வெற்றி உறுதி என்று உறுதிப்படுத்தினார். பாமகவின் தீவிர பிரசாரமும், கூட்டணி விரிவாக்கமும் தமிழக அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். 2026 தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.